சிறையில் இருந்து வரும் ‘கால்‘, அலறும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் : முற்றுபுள்ளி வைத்த முதலமைச்சர்!!

7 November 2020, 8:12 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி : வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் பணத்தை பறிக்கும் கும்பலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்தில் காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, கூடுதல் டிஜிபி ஆனந்த மோகன், சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கோத்ரா மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் , ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சமூக ஊடகத்தின் ஏற்படும் தவறுகளை தடுப்பது, பணம் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், புதுச்சேரியில் ரவுடிகள் சிறையில் இருந்தபடியே தங்கள் ஆதரவாளர்களுக்கு செல்போனில் பேசி குற்ற சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் பணத்தை பறிக்கின்றனர். இதற்கு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

குற்றவாளிகளை கைது செய்வதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம். ரவுடிகள் சிலர் கடைகளிலும், தொழிலதிபர்களையும் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் அரசு தலையிடாது என்று தெரிவித்தார்.

Views: - 24

0

0