நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு : பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் குடியிருப்பை நோக்கி படையெடுத்த பாகுபலி யானை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2022, 10:38 am
Bahubali Elephant -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் மீண்டும் காட்டு யானை பாகுபலி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.

இதனையடுத்து விவசாயிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் இந்த காட்டுயானை பாகுபலியை பிடித்து கும்கி யானையாக மாற்ற வனத்துறை கடந்த 5மாதங்களுக்கு முன்பு முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் வனத்துறை அதிகாரிகளின் முயற்சி தோல்வி அடைந்தது.

இதற்கு பின்னர் காட்டு யானை பாகுபலியின் நடமாட்டம் கிராம பகுதிகளில் இல்லாமல் காட்டு பகுதிகளிலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியினை ஒட்டிய கிராம பகுதிகளில் மீண்டும் காட்டு யானை பாகுபலி நடமாட துவங்கியுள்ளது.

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையை கடந்த காட்டு யானை சமயபுரம் பகுதிக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகள் நிறைந்த சாலைகளில் உலாவியது இதனை கண்ட மக்கள் அச்சமடைந்தனர்.

இன்று அதிகாலை மீண்டும் சமயபுரம் குடியிருப்பு சாலையில் நடந்து சென்றது. இந்த யானை இதுவரை மனிதர்களை தாக்கியதில்லை என்றாலும் கிராம சாலையில் அடிக்கடி உலாவி வருவதால் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் அடர் வனப்பகுதியினுள் காட்டு யானை பாகுபலியை விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Views: - 709

0

0