மீட்பு பணிகளில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுங்கள் : பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!!
Author: kavin kumar7 November 2021, 8:51 pm
சென்னை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் பாஜகவினர் முனைப்பு காட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகமெங்கும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமான அளவில், கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்கள் துயர் துடைக்கும் வகையிலே, நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பின், தொடர்புடைய அரசு அதிகாரிகளை அணுகி தேவையான உதவிகளை பெற்றுத்தர வேண்டுகிறேன். பொது மக்களும், ஆங்காங்கே மழை வெள்ளத்துடன், தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி வருவதால் மிகக் கவனமாக வெளியில் சென்று பாதுகாப்புடன் வர வேண்டும்.
முடிந்த அளவு, வெளியில் செல்வதை தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்.எவ்வித புரளிக்கும் இடம் தராமல், மக்களை அச்சத்தில் இருக்க விடாமல், அதிகார பூர்வமான தகவல்களை மட்டுமே நம்பவும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0
0