தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவன்… உறவினர்கள் சூழ்ந்ததால் தலைமறைவான மருத்துவர்

2 September 2020, 12:35 pm
Quick Share

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்தால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தையடுத்த கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அகில், பால் வெட்டும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகனான 12 வயதான அபினேஷ் கடையாலுமூடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-வகுப்பு படித்துவருகிறார். நேற்றுமுன்தினம் காய்ச்சலால் அவதிபட்ட நிலையில், கடையாலுமூட்டிலுள்ள தாஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் லூக்கா என்பவர் சிகிச்சை அளித்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

நேற்று மறுபடியும் சிறுவன் அபினேஷ்க்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலையில் சுயநினைவை இழந்த சிறுவன் அபினேஷை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான். இதையறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் சிறுவன் உயிரிழந்தாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் மருத்துவமனையை மூட வலியுறுத்தியும், எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்தவம் பார்த்த மருத்துவர் லூக்காவை கைது செய்ய வேண்டும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையை மூடி சீல் வைத்து, தலைமறைவான மருத்துவர் லூக்காவை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0