வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் : இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் சடலம் சுமந்து செல்லும் அவலம்!!

17 November 2020, 3:41 pm
No Bridge - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடல்களை கட்டிலில் எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கிராமம் லட்சுமிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை. மேலும் அப்பகுதியில் காட்டாற்று ஓடையினை கடந்து தான் இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்களை எடுத்து சென்று இறுதி சடங்கு செய்யும் நிலை உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காட்டாற்று ஓடையின் பகுதியில் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டதாகவும், இது அமைக்கும் போதே தரமில்லை என்று மக்கள் புகார் தெரிவித்த பிறகும், அதனை மீறி பாலம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் அமைக்கப்பட்ட சில மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாலம் அடித்துச்செல்லப்பட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் 2 ஆண்டுகளாக காட்டாற்று ஓடையின் வழியாக தான் இறந்தவர்களின் உடல்களை கொண்டு சென்று வருவதாகவும், மழை காலத்தில் காட்டாற்று ஓடையில் மழைநீர் தேங்கி விடுவது அல்லது வெள்ளம் ஏற்பட்டால் உடல்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

கிராமத்தில் இருந்து காட்டாற்று ஓடை வரை வண்டியில் கொண்டு சென்றும், அதன் பின்னர் கட்டிலில் உடலை வைத்து கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக காட்டாற்று ஓடையில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் அந்த கிராமத்தில் முதியவர் ஒருவர் நேற்று உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அந்த முதியவரின் உடலை தேங்கியுள்ள மழைநீர் வழியாக மிகுந்த சிரமத்திற்கு இடையில் எடுத்து சென்று அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்து உடலை அடக்கம் செய்தனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் மாயனத்திற்கு செல்வதற்கு சரியான பாதை மற்றும் காட்டாற்று ஓடையை கடக்க தரமுள்ள பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.