சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய சகோதரர்கள்.. மோப்பம் பிடித்த போலீஸ்… அம்பலமான நாடகம்!!
Author: Udayachandran RadhaKrishnan7 September 2023, 2:08 pm
சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய சகோதரர்கள்.. மோப்பம் பிடித்த போலீஸ்… அம்பலமான நாடகம்!!
கும்பகோணம் அருகேயுள்ள உள்ள துக்காச்சி கிராமத்தை சேர்ந்தவர் அலாவூதின்(70). இவருக்கு சுல்தான், அப்துல் சமத் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இவர்கள் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், வெளியே சென்று பார்த்த போது, வீட்டின் முன்பக்கம் உள்ள காலி இடத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்த இடத்தில் இரண்டு மதுபான பாட்டில்கள் சிதறியும் கிடந்துள்ளது. இதையடுத்து, காவல் நிலையம் சென்ற அலாவுதீன், தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, அலாவுதீன் வீட்டில் கிடந்த மதுபாட்டில்கள் மற்றும் திரிக்காக பயன்படுத்தப்பட்ட செய்தித்தாளின் காகிதம் உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொண்டனர்.
மேலும், வீட்டை சுற்றிலும் வேறு ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்பதையும் ஆராய்ந்தனர். அப்போது, அலாவுதீன் வீட்டின் பின்னால், இருந்த செடிகளுக்கு இடையில் ஒரு கேனில் பெட்ரோலும், செய்தித்தாள்களையும் கண்டுபிடித்தனர்.
போலீஸார் கண்டெடுத்த இரண்டு செய்தித்தாளும் ஒரே தேதி, ஒரே நிறுவனத்தினுடையது என்பதை உறுதி செய்தனர். இதனால், சந்தேகமடைந்த அவர்கள் சுல்தான், அப்துல் சமத் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியானது.
அலாவுதீன் வீட்டின் முன்பகுதியில் இரண்டு பேர் குடியிருந்து வருகின்றனர். அவர்களை நீண்ட நாட்களாக வீட்டை காலி செய்ய சொல்லியும், அடாவடியாக அவர்கள் காலி செய்ய மறுத்தும் வந்துள்ளனர்.
இதனால், அவர்களை போலீஸில் சிக்க வைத்து, வீட்டை காலி செய்ய வைக்க திட்டமிட்ட சுல்தான் மற்றும் அப்துல் சமத் இருவரும் தங்கள் வீட்டின் மீது தாங்களே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0
0