ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை…!

31 August 2020, 9:18 am
Quick Share

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

லண்டனை தலைமை இடமாக கொண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் நீர், நிலம், காற்று மாசு ஏற்படுவதாக கூறி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தொடர்ந்து, கடந்த 2018-ல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் பகுதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் 100-வது நாளில் மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்றனர்.

அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசு மற்றும் வேதாந்தா குழுமம் ஆகிய இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா குழுமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதியும் வழங்கினர்.

இந்த சூழலில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்ய மூகாந்திரம் இருந்ததால், தமிழக அரசு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, மற்றும் மதிமுக கட்சி தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த 26 ஆம் தேதி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Views: - 0

0

0