விவசாயிகளுக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருப்பது திமுக அரசு: பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி…

Author: Udhayakumar Raman
19 November 2021, 8:01 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருப்பது திமுக அரசு என ரிஷிவந்தியம் தொகுதியில் மழை சேதங்களை பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இதனை அறிந்த பொதுப்பணித் துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஏ.வ. வேலு நேரடியாக திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியம், தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை, சித்தபட்டினம், கடம்பூர், வீரட்டகரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து நிவாரண உதவிகளையும் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அதிக மழை பெய்துள்ளது.

நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்ற போதிலும் விவசாய பயிர்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இது தொடர்பான கணக்குகளை அதிகாரிகள் எடுத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக சாலைகள் பாலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு என்றுமே விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். உரிய நடவடிக்கை எடுத்து எப்பொழுதும் திமுக அரசு மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறினார். ஆய்வின்போது ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 106

0

0