கடைசி மூச்சு வரை உழைத்து உண்பதே குறிக்கோள் : தள்ளாடும் வயதில் சொந்தக்காலில் உழைத்து சம்பாதிக்கும் 101 வயது மூதாட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 12:59 pm

தஞ்சை : 101 வயதிலும் கடும் வெயிலை பொருட்படுத்தாது சாலையோரம் வியாபாரம் செய்யும் மூதாட்டியின் செயல் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேசனாக அமைந்துள்ளது.

தஞ்சை அருகே உள்ள பொட்டுவாசாவடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி குழந்தையம்மாள் (வயது 101). இவர்களுக்கு 2 மகன், 3 மகள் உள்ளனர். குழந்தை அம்மாளுக்கு 18 வயது இருக்கும்போது ஆரோக்கியசாமி யுடன் திருமணம் நடைபெற்றது.

பின்னர் 37 வயதில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே வந்தார். பிறரின் உதவியை நாடாமல் சொந்தக்காலில் நின்று உழைத்து முன்னேற வேண்டும் என்று வைராக்கியம் கொண்டார்.

அப்போது அவர் எடுத்த முடிவுதான் இனி ஒருபோதும் வீட்டுக்கு செல்லாமல் சாலையோரம் ஏதாவது பொருட்களை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்பது. அதன்படி கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோரம் வியாபாரம் செய்தார்.

அதாவது அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இதில் சொற்ப அளவிலே அவருக்கு வருமானம் கிடைத்தாலும் பெரிதாக ஆசைப்படவில்லை. இதற்கிடையில் அவரது கணவர் ஆரோக்கியசாமி இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரது பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். தற்போது வரை கீழவாசல் பகுதியில் தான் வியாபாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- என் உயிர் உள்ளவரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். என் பிள்ளைகள் ஆதரவு எனக்கு தேவையில்லை. 70 ஆண்டுகளாக பழம் வியாபாரம் செய்து வருகிறேன்.

பெட்டி கடை வைப்பதற்கு போதிய பணம் இல்லாததால் சாலையோரம் நின்று வியாபாரம் செய்கிறேன். தற்போது வெயில் சுட்டெரித்து வந்தாலும் வியாபாரம் செய்து வருகிறேன்.


கடைசி காலம் வரை யாருடைய தயவும் இல்லாமல் சொந்த காலில் தான் இருப்பேன். எனக்கு அரசாங்கம் சிறிய அளவில் பெட்டி கடை வைத்துக் கொடுத்தால் போதும். என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?