இலக்கணமாக மாறிய இந்து – இஸ்லாமிய நண்பர்களின் சம்பவம் : இறப்பிலும் இணை பிரியாத நட்பு!!

8 April 2021, 7:34 pm
ariyalur Hindu islam Friendship -Updatenews360
Quick Share

அரியலூர் : ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து இறந்த இந்து-முஸ்லிம் இணைபிரியாத நண்பர்களின் செய்ல இலக்கணமாக மாறியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜுப்லி ரோட்டில் வசித்து வருபவர் மகாலிங்கம் (வயது 78). இவர் ஜெயங்கொண்டம் – விருத்தாசலம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

மகாலிங்கம் வீட்டின் எதிர் தெருவில் வசித்து வருபவர் ஜெய்லாபுதீன் (வயது 66). இவர் அதே பகுதியில் அரவை மிஷின் வைத்து தொழில் செய்து வருகின்றார். இவர்கள் இரண்டு குடும்பங்களும் இரண்டாவது தலைமுறையாக ஒன்றாகவே இணைந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இதேபோன்று மகாலிங்கமும், ஜெய்லாபுதீனும் பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இணைபிரியாத நண்பர்களாக இதுவரை இருந்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் மகாலிங்கத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லை என ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று சேர்த்தனர். அப்போது மருத்துவமனையில் இருவரும் எதிர் எதிரே உள்ள இருக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனை எதிர் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மகாலிங்கமும் இறந்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் கொண்டுவந்து அவரவர்கள் வீட்டில் அவர் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இரு நண்பர்களும் இறந்தது இரு மதத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து இருவரது மகன்களும் கூறுகையில், எங்களது தாத்தா காலம் தொடங்கி எங்களது தந்தை காலம் வரை இரு குடும்பமும் மாமன், மைத்துனர் என்ற முறையில் ஒன்றாகவே வாழ்ந்து வந்துவிட்டோம். இதன் பிறகும் எங்களது காலம் மற்றும் சந்ததியினர் காலமும், தொடர்ந்து இரு குடும்பமும் இதேபோன்று ஒற்றுமையாகவே இருந்து இவ்வுலகிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்கும் என தெரிவித்தனர்.

Views: - 1

0

0