முடிந்தது விசாரணை… அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பதவி தப்புமா? தீர்ப்புக்கு நாள் குறிக்கும் நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 November 2023, 9:49 pm
udhay
Quick Share

முடிந்தது விசாரணை… அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பதவி தப்புமா? தீர்ப்புக்கு நாள் குறிக்கும் நீதிமன்றம்!!

சனாதனத்துக்கு எதிராகப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர் குமார், ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

திமுக எம்.பி ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பகிர்வு என்பது நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், அதன்படி இந்த நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை அல்லது சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் அரசியல் சாசன மதிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்தான் ஆ.ராசா பேசினாரே தவிர, அரசியல் சாசனத்திற்கு விரோதமாகப் பேசவில்லை என குறிப்பிட்டார்.

அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான், அவர்கள்தான் திமுக-வை ஆட்சி அமைக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள் என தெரிவித்தார்.

இதுபோன்ற அரசியல் மற்றும் கொள்கை பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும், எம்.பி. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என விளக்கம் அளித்தார்.

அற்ப காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை அதீத அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, கோவில் சொத்துகளை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டதற்காக உள்நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் இந்த வழக்குகளை இந்து முன்னணியினர் தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

1902ஆம் ஆண்டில் பனாரஸ் பல்கலைகழகம் வெளியிட்ட சனாதனம் குறித்த புத்தகத்தில் சனாதன கொள்கைகள் என்பது ஆரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அனிதா சுமந்த், இந்து முன்னணியினர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Views: - 199

0

0