வங்கியில் கள்ள நோட்டுக்களை கொடுத்த விவகாரம் : கடன் கொடுத்தவருக்கு சம்மன்..

18 November 2020, 11:19 am
Quick Share

கோவை: கோவையில் தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்ய முயன்ற விவகாரத்தில் ஐடி ஊழியருக்கு கடன் கொடுத்த நபருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹித்தேஷ் ஆனந்த். தனியார் மென்பொருள் நிறுவன பணியாளரான இவர் வடவள்ளி அருகே உள்ள தனியார் வங்கியில் நேற்று முன் தினம் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய சென்றார்.

அப்போது அவர் கொண்டு வந்த பணத்தில் 40 ரூ.500 நோட்டுகள் கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,
ஹித்தேஷ் ஆனந்த் நீலகிரி மாவட்டத்தில் மதன் லால் என்ற வட்டிக்கு விடும் தொழில் செய்பவரிடம் கடன் வாங்கி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்த நேற்று நீலகிரி சென்றனர். ஆனால், அங்கு மதன் லால் இல்லை என்றும் பெங்களூர் சென்றுவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விளக்கம் கேட்டு மதன்லாலுக்கு சம்மன் அனுப்பிப்பட்டுள்ளது. மதன் லாலிடம் விசாரணை நடத்தும் போது தான் கள்ள நோட்டுக்கள் எப்படி வந்தது? யார் புழக்கத்தில் விட்டது என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.