பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை : வாலிபர் கைது!!

20 October 2020, 1:03 pm
Platform Murder - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சாலையோரம் தூங்கிய தொழிலாளியின் தலையில் சிமெண்ட் கல்லை போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் இரவு நேரத்தில் கடை முன்புறமுள்ள வளாகம் மற்றும் பிளாட்பாரங்களில் பலர் தங்கி வருகின்றனர். இவர்கள் பகல் நேரத்தில் கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் பிளாட்பாரங்களில் தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நஞ்சப்பா சாலையோரத்தில் படுத்திருந்த ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், இறந்தது சிவகங்கை மாவட்டம் ஊரணி வடகரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 53) என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணன் கோவையில் சில மாதங்களாக பிளாட்பாரங்களில் தங்கி கிடைக்கும் கூலி வேலைக்கு சென்றதும், இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த தங்கபாண்டி (வயது 36) என்ற வாலிபரை நேற்று நள்ளிரவு காட்டூர் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது :

நான் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் பிளாட்பாரங்களில் தூங்குவேன். நேற்று முன்தினம் நஞ்சப்பா சாலையில் உள்ள ஒரு சர்ச் முன்பு நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் பாக்கெட்டில் யாரோ கையை விடுவது போல் எனக்கு தெரிந்தது. உடனே திடுக்கிட்டு எழுந்த நான் அவரைத் தடுத்தேன். அப்போது அவர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த சிமெண்ட் கல்லை தூக்கி அவர் தலையில் போட்டு விட்டு தப்பினேன். சொந்த ஊர் சென்று தலைமறைவாக நினைத்திருந்த போது போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொலை கோவை பிளாட்பார வாசிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 23

0

0