மின்சாரத்துறையின் அலட்சியம் – வனஉயிரிகளின் உயிரை பறித்த சோகம்…!!

Author: Aarthi
10 October 2020, 12:00 pm
elephant death - updatenews360
Quick Share

நீலகிரி: மின்வாரியத்தின் அலட்சியத்தால் வனப்பகுதியில் யானை, 2 கீரிப்பிள்ளைகள், 4 காட்டுப் பன்றிகள் உயிரிழந்ததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் வழியில் உயரழுத்த மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின்கம்பத்திற்கு அடியில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆண் யானை, 4 காட்டுப் பன்றிகள், 2 கீரிப்பிள்ளை, 3 பாம்புகள், 1 காகம் இறந்து கிடந்துள்ளன.

இறந்த உயிரினங்களை பிரேத பரிசோதனை செய்ததில் மின்சாரம் பாய்ந்ததால்தான் அவை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறியிருந்தது.

நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததில் மின்கம்பம் 152 மிமி நகர்ந்திருப்பதால், அதிக பலத்துடன் யானை இந்த மின்கம்பத்தை முட்டியதன் காரணமாக கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பிடியிலிருந்து மின்வடம் கழண்டு மின்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் யானை உடலிலும் பாய்ந்து அங்கு வந்த பிற உயிரினங்கள் உடலிலும் பாய்ந்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கூடலூரில் உள்ள உயரழுத்த மின்கம்பித் தொடரை ஆய்வு செய்ததில், இதேபோல் 47 இடங்களில் மின்வடம் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்த யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர் 10 நாட்களுக்கு முன்னரே யானை இறந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார். யானை இறந்த உடனே இந்த மின்கசிவை சரி செய்திருந்தால் பன்றி, கீரிப்பிள்ளை, பாம்பு, காகம் ஆகிய உயிரினங்கள் இறந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது மின்சாரத்துறையை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடுமையாக விமர்சித்திருந்தது. குறிப்பாக மின்வடத்திற்கு பாதுகாப்பு உறை அமைக்க வேண்டும். ஒரு கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மின்வாரியம் பின்பற்றாதது கடும் கண்டத்திற்குரியது என்று தெரிவித்தார்.

இந்த செயலுக்காக மின்வாரியத்திற்கு ஏன் அபராரம் விதிக்கக் கூடாது என நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பதில் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டுமென்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Views: - 52

0

0