விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2023, 2:27 pm
Cbe -Updatenews360
Quick Share

விசாரணைக்கு சென்ற காவலரை கடித்து வைத்த பத்திரிகை நிருபர் : கார் திருடிய வழக்கில் அரங்கேறிய நாடகம்!!

கோவை கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருக்கு ரூ.2,30,000க்கு விற்பனை செய்துள்ளார்.

பணத்தை பின்னர் தருகிறேன் என்று கூறி காரை எடுத்துச் சென்றவர் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இது குறித்து சண்முகசுந்தரம் கடந்த 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர்
பிரகாசத்தை அழைத்து விசாரித்த போது இன்னும் ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து பிரகாசம் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த சண்முகசுந்தரம் பிரகாசத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசம் குறித்து விசாரித்து அவரது செல்போன் எண் மூலமாக அவர் குடியிருக்கும் முகவரியை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் புகழேந்தி பீளமேடு சிவராம் நகர் ஆடிஸ் வீதியில் குடியிருக்கும் பிரகாசம் வீட்டிற்கு சென்று பிரகாசத்தை அழைத்துவர சென்றுள்ளார்.

அப்போது பிரகாசம் வர மறுத்து தலைமை காவலர் புகழேந்தியின் இடது கையை கடித்து விட்டு, தனக்குத்தானே சுவற்றில் முட்டி நெற்றியில் சிறிய அளவில் ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். காவலர் புகழேந்தி தன்னைத் தாக்கியதாக நாடகமாடியுள்ளார்.

மேலும் காவலர் புகழேந்தியை பிரகாசம் கடித்ததில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலர் புகழேந்தி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாசத்தை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரகாசம் வார பத்திரிகைகளில் செய்தியாளராக நிருபராக பணியாற்றி வருவதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரகாசம் கடித்ததால் கையில் காயம் அடைந்த தலைமை காவலர் புகழேந்தி அளித்த புகாரின் அடிப்படையில சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாசத்தின் மீது காவலரை
பணியைச் செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகள் பேசியது, கடித்து தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் பிரகாசம் ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 273

0

0