யானைகள் வருகை அதிகரிப்பு : வனத்துறை எச்சரிக்கை.!!

22 May 2020, 8:02 pm
Nilgiri Elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமவெளி பகுதிகளில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளதால் யானைகளுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் சமவெளி பகுதிகளிலிருந்து மலைப் பகுதிகளுக்கு யானைகள் படையெடுக்க துவங்கியுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் யானை கூட்டங்கள் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்களை யானைகள் விரட்டி செல்வது தொடர் கதையாக உள்ளது. எனவே வனத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனரக வாகனங்களை சாலையில் நிறுத்தி ஓய்வெடுப்பது, பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் வனப்பகுதி ஒட்டியுள்ள ஆதிவாசி கிராம மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.