தமிழகத்தில் நிறைவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

19 January 2021, 9:05 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் இந்த பருவமழை, இந்த ஆண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வந்ததால் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை கடந்த 18ம் தேதி வரை 18 நாட்கள் நீடித்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலையை எட்டியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் கூறியதாவது,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். குறிப்பாக 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் , குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடகிழக்கு பருவமழையானது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 3

0

0