நோயாளியை வீல் சேரில் இருந்து கீழே தள்ளி விடும் மருத்துவ பணியாளர்.!!!
15 August 2020, 11:17 pmகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமையிடத்து மருத்துவமனையில் நோயாளியை வீல்சேரில் இருந்து கீழே தள்ளி விட்ட மருத்துவ பணியாளரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு சுதந்திர தின விழா நடைபெற்றது. கொரோனோ ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணி புரிந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கு, துறையின் சிறப்பு சாதனை செய்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி கொண்டிருந்த அதே நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை வீல் சேரில் மருத்துவரிடம் காண்பித்து மீண்டும் மருத்துவமனையில் உள்ள படுக்கைபகுதிக்கு கொண்டுவரும் மருத்துவ பணியாளர் ஒருவர் நோயாளியை பார்த்து வீல் சேரை விட்டு இறங்குடா, நான் உன்னைத் தொட மாட்டேன், உனக்கு என்ன வியாதி இருக்குமென எனக்குத் தெரியாது எனக்கூறி அவரை கீழே இறங்கச் சொல்கிறார்.
இதையடுத்து உடல்நிலை முடியாத நிலையில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அந்தந்த மனிதர் வீல் சேரை விட்டு இறங்க முயற்சித்த போது முடியாமல் போகவே அப்படியே வீல்சேரிலிருந்து குப்பையைக் கொட்டுவது போல் அந்த நோயாளியை கீழே தரையில் தரதரவென இழுத்து தள்ளுகிறார் அந்த மருத்துவ பணியாளர். இந்த சம்பவத்தை அங்குள்ளவர்கள் படம்பிடித்து அனுப்பவே பார்ப்பவர்கள் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் மனிதத் தன்மையின்றி நடந்து கொள்ளும் இந்த மருத்துவப் பணியாளர் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சம்பந்தப்பட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தற்பொழுது பொறுப்பில் இருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அவரை தொடர்புகொள்ள வலியுறுத்தினார். மருத்துவமனைக் கண்காணிப்பாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து 4 மணி நேரங்களுக்கு பிறகு மாவட்ட தலைமையிடத்து மருத்துவமனையின் இணை இயக்குனர் தாமாக முன்வந்து அவ்வாறு நடந்த பணியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.