வளர்ப்பு நாயை கட்டி வைத்து அடித்த நபர் கைது..!

Author: kavin kumar
9 October 2021, 6:22 pm
Quick Share

கோவை: கோவையில் வளர்ப்பு  நாயை கட்டி வைத்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் . 

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே கீரநத்தம் – புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை,கட்டிவைத்து   சரமாரியாக தாக்கி, அதை துன்புறுத்தி விரட்டியடித்தார்.சொல்ல வழியின்றி துடிதுடித்து கடுமையான வலிகளுடன் கதறி ஓடியது அந்த நாய். அதைக்கண்டு பரிதாபம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், அவர் நாயை துன்புறுத்தும் காட்சியை செல்போன் மூலம் ஒளிப்பதிவு செய்து, அந்த வீடியோவினை  சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். 

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை பார்த்த, கோவையைச் சேர்ந்த பிராணிகள் நல சங்க நிர்வாகி மினிவாசுதேவன், மாரிமுத்துவின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது, பிராணிகள் நல சங்க நிர்வாகிகளை சரமாரியாக கெட்ட வார்த்தையில் திட்டியும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரித்துள்ளார்.
இதனால் மினிவாசுதேவன், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் மாரிமுத்து மீது புகார் அளித்தார். இதனையடுத்து நாயை துன்புறுத்தி, சித்திரவதை படுத்தியதாக கூறி மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து அவினாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.  கடுமையான தாக்குதலுக்கு ஆளான அந்த நாயை மீட்ட பிராணிகள் நலச்சங்கத்தினர் அதனை தங்களது காப்பகத்தில் பராமரித்து வருகின்றனர் . 

Views: - 398

1

0