ஆடு திருடிய நபர் மீது ‘அந்த இடத்தில்’ எட்டி உதைத்த காவலர்… வைரலாகும் வீடியோ : உதவி ஆய்வாளரை நீக்க கோரி வலுக்கும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 12:21 pm
Police Shame - Updatenews360
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஆடு திருடிய நபரை விசாரிக்கச் சென்ற புஞ்சை புளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் காலால் எட்டி உதைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் வளர்த்து வந்த ஆட்டை பட்டப்பகலில் திருடி செல்ல முற்பட்டுள்ளனர்.

அப்போது அதைக்கண்ட விவசாயி நாகராஜ் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆடு திருடிச் சென்ற நபர்களை விரட்டி பிடித்த போது அதில் ஒருவர் பிடிபட்டு மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார்.

பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ் ஆடு திருடிய நபரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் மத்தியில் அந்த நபரின் உயிர்நாடியான முக்கிய பகுதியில் எட்டி உதைத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் வேளையில் ஆடு திருடிய நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தாமல் பொதுமக்கள் மத்தியில் இது போன்ற செயலில் ஈடுபட்ட புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 522

0

0