உப்பாறு அணையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்: ஆர்வமுடன் பார்க்க படையெடுக்கும் பொதுமக்கள்….!!

28 November 2020, 5:32 pm
bird 4 - updatenews360
Quick Share

திருப்பூர்: குண்டடம் அருகே உப்பாறு அணையில் குவிந்த வெளிநாட்டு பறவைகளை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள குண்டடம் அருகே உப்பாறு அணையில் வெளிநாட்டு அரிய வகை பறவைகள் குவிந்துள்ளன. இவற்றை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வருகை தர காரணம் அப்போதுதான் குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும். தற்போது தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தால் குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. இதையடுத்து வெளிநாட்டு பறவைகள் தமிழகத்திற்கு வருகை தர தொடங்கி உள்ளன. ஊத்துக்குளியை அடுத்த நஞ்ராயன் குளத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கடந்த வாரம் வந்தன. தற்போது குண்டடம் அருகே உப்பாறு அணைக்கு ஐரோப்பாவை சேர்ந்த பறவைகள் வந்துள்ளன. இதுகுறித்து தாராபுரம் இயற்கை இயற்கை கழக நண்பர்கள் சதாசிவம் மற்றும் மகேஷ் கூறியதாவது,

உப்பாறு அணைக்கு ஆண்டுதோறும் , நீலச்சிறகு வாத்து, கொசு உள்ளான், சீழ்க்கை சிறகி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஐரோப்பா மற்றும் அலாஸ்கா நாடுகளில் இருந்து பறவைகள் வந்துள்ளன. தற்போது அந்த நாடுகளில் உறை பனி கால நிலை நிலவுகிறது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை செல்லும் பறவைகளான செந்தொண்டை வயல், நெட்டைக்காலி, இஸ்பெலின் புதர்சிட்டு, ரைனெக், சாம்பல் தலை கூம்பலகன் , நெடுங்கால் உள்ளான், சைபெரியன் புதர் சிட்டு, பூஞ்சை பருந்து, போன்ற அரியவகை வெளிநாட்டு பறவைகள் முதன்முதலாக திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த உப்பாறு அணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வெளிநாட்டு பறவைகள் வருகை குறித்து தகவல் அறிந்து சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் புதிய வெளிநாட்டு பறவைகளை வந்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.