தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை சினிமா பாணியில் கைது

6 September 2020, 10:24 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு கைவரிசை காட்டி வந்த கொள்ளையனை சினிமா பாணியில் விரட்டி கைது செய்த போலீசார் , அவனிடமிருந்த 47 சவரன் தங்க நகை, செல்போன்கள், 2 துப்பாக்கி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதுரை சமயநல்லூரில் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் நிற்காமல் சென்ற போது போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று அவனை சுற்றி வளைத்தனர். அப்போது அவனை போலீசார் சோதனை செய்தபோது, இரு துப்பாகிகள் மற்றும் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவனை சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில், மெகா திருடன் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பெஞ்சமின் என்பதும், இவர் பூட்டியிருக்கும் வீடு மற்றும் சாலையில் தனியே செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபடுவது, வீடுபுகுந்து திருடுவது என பல்வேறு தொடர்திருட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. அவனிடமிருந்து 47 சவரன் தங்க நகைகள், 10 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 2 கைகடிகாரங்கள், 1 டூவிலர், 2 ஏர்கன் துப்பாக்கிகள், மற்றும் தோட்டாக்கள் என பெஞ்சமினிடமிருந்து சமயநல்லூர் போலீசார் கைப்பற்றி திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Views: - 0

0

0