இடத்தகராறால் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் : பழனியில் பரபரப்பு!!

16 November 2020, 12:50 pm
Gun Shoot - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் இடத்தகராறு காரணமாக பிரபல தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். விவசாயியான இளங்கோவனுக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் பன்னிரெண்டு செண்ட் காலி இடம் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகே பிரபல தொழிலதிபரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக தியேட்டர் உள்ளது. இந்தநிலையில் இளங்கோவன் இடத்தில் தனக்கு சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்க சென்றபோது இடத்திற்கும் நுழையக்கூடாது என்று தொழிலதிபர் நடராஜன் தெரிவித்ததால், இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சுவாய்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆவேசமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதாக தெரிகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில் சுப்பிரமணி வயிற்றிலும், பழனிச்சாமி இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொழிலதிபர் நடராஜன் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற இளங்கோவன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த பழனி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நடராஜனை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

நடராஜன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருக்கு சொந்தமானது என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரில் வயிற்றில் குண்டுபாய்ந்துள்ள பழனிச்சாமியை கோவை தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச்சென்றனர். தற்காப்புக்காக வழங்கிய துப்பாக்கியை விவசாயிகள் மீது சுட்டு தவறாக பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Views: - 25

0

0