இறந்ததாகக் கூறி புதைப்பதற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை: அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி…

4 July 2021, 9:46 pm
Quick Share

தேனி: தேனியில் இறந்ததாகக் கூறி மயானத்தில் புதைப்பதற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பாத்திமாமேரி என்ற வானரசி(30).இவரது கணவர் பெயர் பிலவேந்திரராஜா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வானரசி மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாமேரிக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் இன்று இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்தனர். இறந்த நிலையில் அளிக்கப்பட்ட குழந்தையை பெற்றுக் கொண்டு பிலவேந்திரராஜா மற்றும் பாத்திமாமேரி தம்பதியினர் உறவினர்களுடன் கிருத்துவமுறைப்படி குழந்தையை மயானத்தில் புதைக்க கல்லரைத் தோட்டத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கனவே குழி தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்ததால், குழந்தையை குழிக்குள் புதைப்பதற்காக தூக்கியபோது குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. குழந்தையைப் பரிசோதித்து பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி தம்பதியினர் மட்டுமல்லாது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வாகனம் மூலம் குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உயிருடன் பிறந்த குழந்தையை சற்று நேரத்தில் இறந்தது என்று அறிவித்தது மட்டுமல்லாமல் இறப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து குழந்தையின் பெற்றோரிடத்தில் உயிருடன் இருந்த குழந்தையை சடலம் என்று கூறிய ஒப்படைத்த சம்பவம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

மயானத்தில் புதைக்கச் சென்ற குழந்தை திடீரென உயிருடன் வந்ததைக் கண்டு அவர்களது பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதனிடம் கேட்டபோது, குழந்தையின் தாய்க்கு நஞ்சுக்கொடி சுற்றி இருந்ததால் அதை அகற்றுவதிலேயே மருத்துவர் கவனத்தை செலுத்தி வந்ததாகவும், குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் குழந்தை மூச்சுவிடாமல் இருந்துள்ளது. அதனால் குழந்தையை சரியாக பரிசோதிக்காமல் மருத்துவர் இறந்துவிட்டதாக தவறாக கருதி விட்டதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 103

0

0