அரிக்கொம்பனால் இருளில் மூழ்கிய மாஞ்சோலை மலை கிராமம்… வாழ்விடத்தை தேடி அலையும் காட்டு யானை..!!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 9:48 am

தேனி ; கம்பத்தில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் காட்டு யானை நெல்லை வன பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாஞ்சோலை மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது.

தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடுவதற்காக, வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அழைத்து வந்தனர்.

நெல்லை மாநகர வழியாக பிரதான சாலையில் லாரியில் ஏற்றி கொண்டுவரப்பட்ட அரிசி கொம்பன் யானை மணிமுத்தாறு அணை அருகே உள்ள வன சோதனைச் சாவடி வழியாக காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணையின் மேல்பகுதியில் அரிசி கொம்பன் யானையை விடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யானை கொண்டு செல்லப்பட்ட மலை பாதையில் மின் வயர்கள் தாழ்வான பகுதியில் கிடப்பதால் முன்னெச்சரிக்கையாக நேற்று மாலை 5 மணி முதல் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதி நாலுமுக்கு போன்ற பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், சுமார் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

யானை மணிமுத்தாறு சோதனைச்சாவடியில் இருந்து மஞ்சோலையை கடந்த பிறகே அங்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.

குறிப்பாக, இரவு நேரம் என்பதால் மின்சாரம் இல்லாமல் மாஞ்சோலை மலை கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கியது. ஏற்கனவே மாஞ்சோலை பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், மூன்று மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?