ஈகோவால் INDIA கூட்டணிக்கு தொடர் பின்னடைவு.. திருமா சூசகம்!

Author: Hariharasudhan
8 February 2025, 1:48 pm

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பாஜக முன்னிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை.

டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால், அது தேசத்துக்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்குமா? என்ற ஐயத்தை இந்த முன்னிலை நிலவரங்கள் எழுப்புகின்றன. INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. INDIA கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் ஆய்வு செய்ய வேண்டும். INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும், மக்களையும் காப்பாற்றும் திசையில் சிந்திக்க வேண்டும்.

Thirumavalavan on Delhi Election Results

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, டெல்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது.

இதையும் படிங்க: கை கொடுத்த காங்கிரஸ்.. 15 ஆண்டுகளாக கைவிட்ட டெல்லி.. தலைநகரில் நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பார்த்தவாறு, திமுக மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி, திமுக பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மேலும், டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதேநேரம், ஆம் ஆத்மி எதிர்கட்சி வரிசையிலும், காங்கிரஸ் சட்டமன்றத்திற்கு வெளியிலும் இருக்க உள்ளது. மேலும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!