குமரி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் : அமைச்சர் மதிவேந்தன் தகவல்

Author: Babu
30 July 2021, 8:12 pm
kumari - minister - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பராமரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையினை தனிப்படகில் சென்று ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யப்படுவது வழக்கம். ஏற்கனவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் விரைவில் பராமரிப்பு பணிகள் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கும்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் புதிதாக தொங்குபாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளும். திருவள்ளுவர் சிலையை இரவிலும் பயணிகள் பார்க்கும் வகையில் லேசர் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. முக்கடல் சங்கமத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை வரையில் கேபிள்கார் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் தெரியவந்ததும் சுற்றுலாத் தலங்களை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்படும்.

சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு சலுகைகள் மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் சுற்றுலா பஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் சந்திப் நந்தூரி, குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலர் தாமரைபாரதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Views: - 336

0

0