70 வயது பாட்டி ரேசன் கடையில் பொங்கல் பரிசு வாங்க உதவிய 9 வயது சிறுவர்கள்….

15 January 2021, 10:36 am
Quick Share

தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ2500 பணம், அரிசி, சீனி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கியது. இந்த பொங்கல் பரிசை கார்டு வைத்திருப்பவர்கள் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதற்கான டோக்கன்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்புலெட்சுமி இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகள் மட்டும் இருக்கிறார். இந்த மூதாட்டி நடப்பதற்கே சிரமப்படுபவர். இவருக்கு ரேசன் கடையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொங்கல் பரிசை பெற ரேசன் கடைக்கு மெதுவாக நடந்து சென்றுள்ளார். பாதி தூரம் செல்லும் போது இவருக்கு நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அமர்ந்துள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர் வினிதா, சுப்பிலெட்சுமியின் கேட்ட போது தன்னால் ரேசன் கடைக்கு நடந்து செல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து சுப்புலெட்சுமிக்கு உதவி செய்ய நினைத்த வினிதா தன் 9 வயது இருமகன்களான நிதின் மற்றும் நித்தீஷை அழைத்து, சுப்புலெட்சுமியை ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அவரை ரேசன் கடைக்குக் கூட்டிச்சென்று அங்குப் பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் சுப்புலட்சுமியின் வீட்டிற்கே சென்று விட்டுவிட அறிவுறுத்தியுள்ளார்.

அதன் படியே அந்த சிறுவர்கள் சுப்புலெட்சுமியை ஒரு தள்ளுவண்டியில் வைத்து ரேசன் கடைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். ரேசன் கடையிலிருந்த சிலர் சுப்புலட்சுமிக்கு ரேசனில் பொங்கல் பரிசை வாங்க உதவி செய்தனர். அதன் பின் சுப்பு லெட்சுமியை அதே தள்ளுவண்டியில் வைத்து மீண்டும் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு வந்து விட்டனர். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதைச் சமூகவலைத்தளங்களில் சேர் செய்து 70 வயது பாட்டிக்கு உதவிய 9 வயது சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.

Views: - 0

0

0