கரூர் கும்பல் ஆதிக்கமா..? மாமூல் தராததால் கரார்… அதிகாரிகளை வைத்து டாஸ்மாக் கடைகள் மூடுவதாகப் புகார் : மது பிரியர்கள் தர்ணா !!

Author: Babu Lakshmanan
23 January 2023, 7:55 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாமூல் கொடுக்க மறுத்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் மூடியதால், ஏமாற்றுத்துடன் தர்ணா போராட்டத்தில் மது பிரியர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 22 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், டாஸ்மாக் கடைகளின் அருகில் மதுபான கூடங்களும் செயல்பட்டு வருகின்றனர். மதுபானம் கூடம் நடத்துவதற்கு மாதம் தோறும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு டிடி எடுத்து அதற்கான கட்டணத்தினை மதுபான கூடத்தினை எடுத்தவர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு கடைக்கு விற்பனைக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கோவில்பட்டி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கூடங்களை நடத்துபவர்களிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரை செல்லி கரூரைச் சேர்ந்த ஒரு கும்பல், மாதம் தோறும் ரூ 60 ஆயிரம் தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டு வருவதாகவும், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மதுபானகூடங்கள் மூடப்படும் என்று கூறி மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கரூரைச் சேர்ந்த அந்த கும்பலுக்கு பணம் தர மறுத்த மதுபான கூடங்களை நடத்த கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது மட்டுமின்றி, அதன் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில்பட்டியில் சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது மட்டுமின்றி, மதுபானகூடங்களும் மூடப்பட்டுள்ளன.

வழக்கமாக 12 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடை மட்டும் மற்றும் மதுபான கூடங்கள் திறக்கப்படவில்லை என்பதால் மது வாங்க வந்த மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் கடை பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தன்னுடைய நண்பர்களுக்கு செல்போன் மூலமாக கடை பூட்டியுள்ளதாகவும். வாங்க போராட்டம் நடத்தவும் என்று பேசியது அங்கே சிரிப்பொலியை ஏற்படுத்தியது.

இது குறித்து தூத்துக்குடி டாஸ்மாக் மேலாளர் முருகனை தொடர்பு கொண்டு கேட்ட போது, பாருக்கு பணம் செலுத்தவில்லை, ஆகையால் மதுபான கூடங்களை மூடியதாகவும், சிலர் லைசன்ஸ் இல்லாமல் கடை நடத்துவதாகவும், காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், டாஸ்மாக் மதுபான கூடம் எடுத்தவர் அடுத்த மாதம் 4ந்தேதி வரைக்கும் டிடி எடுத்து கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. கேட்ட தொகையை தர மறுத்த காரணத்தினால் தான் டாஸ்மாக் கடையை மூடி உள்ளதாகவும், பாரை நடத்த விடாமல் அதிகாரிகள் மூலமாக தொல்லை கொடுத்து வருவதாக மதுபான கூடங்களை நடத்துபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?