தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரத் தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Author: kavin kumar
1 December 2021, 4:11 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று எண்ணிக்கை 800ல் இருந்து தற்போது 10 என்கிற எண்ணிக்கைக்குள் உள்ளது. இதனிடையே 12 நாடுகளில் பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவுகிறது. இந்தியாவில் இதுவரையில் இந்த வகை தொற்று எங்கும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 2,000 ஆகும். இவற்றில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

மீதமுள்ள நான்கு லட்சத்தி இருபதாயிரம் பேர் இதுவரையில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எதுவும் செலுத்திக் கொள்ளவில்லை. எனவே மேற்கண்ட தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு இடங்கள் என பொது இடங்கள் என கணக்கிடப்பட்டு உள்ள 18 இடங்களுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனை செய்யும் பணிகள் இன்று முதல் துவங்குகிறது. தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் தங்களது கைபேசியில் உள்ள குறுஞ்செய்தி காண்பிக்க வேண்டும். செலுத்தி கொள்ளாதவர்கள் தடையை மீறி வந்தால் அவர்களுக்கு அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

புதிய வகை தொற்று இந்தியாவில் பரவாத சூழ்நிலையில் விமான நிலையங்கள் மட்டும் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில எல்லைகள் கண்காணிப்பு அல்லது மூடு பணி அடுத்தடுத்து நோய் பரவல் பெருத்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இவற்றில் 80 சதவீதம் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முக கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Views: - 486

0

0