மிரட்டும் புயல்.. கனமழை எச்சரிக்கை : சென்னையில் 142 ரயில்கள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 8:50 pm
Train
Quick Share

மிரட்டும் புயல்.. கனமழை எச்சரிக்கை : சென்னையில் 142 ரயில்கள் ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 510 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், இந்த புயல் வரும் 5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 5ம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளுர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாளை (டிச.3) தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதே நாளை மறுநாள் (டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல டிச.3ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை வடக்கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். டிச.4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது இந்நிலையில், முதல்கட்டமாக 142 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்களும், மதுரை நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், மதுரை-சண்டிகர் உள்ளிட்ட முக்கிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Views: - 183

0

0