திமுக கூட்டணியில் இருந்து விலக காத்திருக்கும் மூன்று கட்சிகள்… பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2025, 7:03 pm
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்களை குறிவைத்து கிட்னி விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களை குறிவைத்து புரோக்கர்கள் செயல்படுகின்றனர். ஆனால் இம்முறை கிட்னி விற்பனை விவகாரத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் புரோக்கர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.
கிட்னி விற்பனையில் ஈடுபடுவோர் ஒரு அமைப்பாக செயல்படுகின்றனர். பள்ளிபாளையம் கிட்னி விற்பனை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
இதில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் அதிகாரிகள் என யாரெல்லாம் உடந்தையாக செயல்பட்டு உள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மயிலாடுதுறை டிஎஸ்பி விவகாரத்தில் அவர் பணியினை நீக்கம் செய்யப்பட்டதில் எந்தவித நியாயமும் கிடையாது.
அந்த டிஎஸ்பி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அவர் நேர்மையாக செயல்பட்டுள்ளார். சீருடை அணிந்த அதிகாரி அவருடைய வாகனத்தில் செல்ல முடியாமல் நடந்து சென்றாரோ அப்பொழுதே அட்மினிஸ்ட்ரேஷன் சீர்குலைந்து விட்டது என்பதை காட்டுகிறது.
முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கு நியாயமும் நீதியும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பாஜக கூட்டணியில் சர்ச்சை எதுவும் கிடையாது. திமுக தலைமையிலான அரசை அகற்ற வேண்டும் என்பதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்
காமராஜரை கேவலப்படுத்திய பிறகு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கலாமா அல்லது விலகலாமா என்ற நிலையில் உள்ளனர். இதே போல் தான் கம்யூனிஸ்ட் கட்சி திருமாவளவன் உள்ளிட்ட கட்சியினரும் உள்ளனர் என தெரிவித்தார்.
