ஹார்டுவேர் கடையில் ரூ.70 ஆயிரம் பணத்தை திருடிய டிப் டாப் ஆசாமி : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 10:12 pm

கோவையில் ஹார்டுவேர்ஸ் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து வேறொருவர் தவற விட்டு சென்ற 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் டிப் டாப் ஆசாமி தப்பிச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளியாகி உள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள நரசிம்மபுரம் குமரன் வீதி சந்திப்பில் அம்மன் எலக்ட்ரிகல்ஸ் என்ற ஹார்டுவேர்ஸ் கடை செயல்பட்டு வருகிறது.

இன்று காலை இங்கு பொருட்கள் வாங்க வந்த பி கே புதூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தான் கொண்டு வந்திருந்த 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கவரில் வைத்து கடையிலேயே மறந்துவிட்டு சென்றுவிட்டார்.

பாதி வழியில் பணம் கடையில் வைத்தது ஞாபகத்திற்கு வந்ததால் பதறியடித்து கடைக்கு வந்து பார்த்தபோது அந்த பணம் மாயமாகி இருந்தது.

இதையடுத்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது டிப்டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்குவது போல் தேவராஜ் விட்டுச் சென்ற பணத்தை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, இருசக்கர வாகன எண்ணை வைத்து மதுக்கரை அருகே உள்ள மலை நகர் பகுதியைச் சேர்ந்த அருண் சங்கர் என்ற செக்யூரிட்டி வேலை பார்க்கும் நபரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 31 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே அருண் சங்கர் பணத்துடன் அவசரமாக வெளியேறி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!