சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து… மின்தடையினால் தப்பிய உயிர்கள் ; போராடி தீயை அணைத்த வீரர்கள்..!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 1:48 pm

திருப்பூர்; திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் உள்ள சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து திடீர் தீ விபத்து ஏற்பட்ட போது, தொழிலாளர்கள் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் ப்ராசஸ் சாயத் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த தொழிற்சாலையில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், டையிங் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் இன்று திடீரென வெடித்து தீ பற்றியது. அருகில் இருந்த டையிங் தொழிலாளர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயானது மளமளவென பரவியதை அடுத்து, உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று இப்பகுதியில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து மங்களம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் சாய தொழிற்சாலையில் பாய்லர் பிடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!