திமுக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம்.! காலிக்குடங்களுடன் மறியல்.!!
12 August 2020, 2:37 pmதிருப்பூர் : பல்லடம் அருகே ஒரு மாதமாக கிடப்பில் போடப்படுள்ள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியும், 20 நாட்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து பல்லடம் ஒன்றிய தலைவர் நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பில் சாக்கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்ட இந்த பணி கடந்த 10 நாட்களாக நடைபெறவில்லை. மேலும் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சியில் இருந்து அறிவொளி நகர் பகுதிக்கு கடந்த 20 நாட்களுக்கும், மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிடப்பில் போடப்பட்டுள்ள சாக்கடை கால்வாய் பணியை உடனடியாக முடிக்க வலியுறுத்தியும், இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க வை சேர்ந்த பல்லடம் ஒன்றிய தலைவர் தேன்மொழி மற்றும் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன் ஆகியோரை கண்டித்து அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து வந்த பல்லடம் தாசில்தார் மற்றும் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.கூடிய விரைவில் சாக்கடை பணிகள் முடிக்கப்படும்,குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.