பல குழந்தைகளுக்கு தாயான மென்பொறியாளர்.! சத்தமில்லாமல் சாதனை செய்து அசத்தல்.!!

1 August 2020, 3:12 pm
Tirupur Milk Service- Updatenews360
Quick Share

திருப்பூர் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களை ஒருங்கிணைத்து 800 லிட்டருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானம் செய்து பெண் மென்பொறியாளர் அசத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ரூபா. மென் பொருள் பொறியாளராக பணி புரிந்து வரும் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கொடுக்கப்பட்ட குழந்தையைப் பார்த்தவுடனே அதிர்ச்சியடைந்துள்ளார். ஒரு குழந்தை பொதுவாக 39 வாரங்கள் கடந்தால் தான் முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் பல காரணங்களால் சில குழந்தைகள் 28, 29 வாரங்களிலே பிறந்து விடுகின்றன. அந்தக் குழந்தைகள் முழு வளர்ச்சி அடையும் வரை இன்குபேட்டரில் வைக்கப்படுகின்றன. அவ்வாறான குழந்தைகளுக்கு செரிமான மண்டலம் சரியான வளர்ச்சி பெற்றிருக்காது.

அந்தக் குழந்தைகளின் அம்மாவுக்கும் குழந்தை வாய் வைத்து குடிக்க ஆரம்பிக்காததால் பாலும் சரி வர சுரக்க ஆரம்பித்திருக்காது . எனவே இந்தக் குழந்தைகள் மற்ற தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பாலைச் சார்ந்தே இருக்கின்றன. அந்த பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் பச்சிளம் குழந்தைகள் , தாயால் கைவிடப்பட்ட குழந்தைகள் , குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் எனப் பல குழந்தைகள் இருந்திருக்கின்றன.

இதையெல்லாம் கண்கூடாகப் பார்த்த ரூபா, தான் ஒருத்தியால் எத்தனை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும், இவ்வளவு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படுகிறது என்பதே எத்தனை தாய்மார்களுக்குத் தெரியும், பல பேருக்குத் தெரிய வந்தால் பலர் முன்வருவர் என நினைத்து செயல்படுத்திய யோசனையின் மூலம்தான் 800 லிட்டர் தாய்ப்பால் சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளார் ரூபா.

தன் குழந்தைக்கு மூன்று வயதிலும் தாய்ப்பால் கொடுத்து வரும் ரூபா, முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடேயே பேசி தாய்ப்பால் தானம் பெற ஆரம்பித்தவர், பின்பு சமூக வலைத்தளங்களின் மூலம் தகவலைப் பரப்பியுள்ளார்‌‌ . அவ்வாறு இவர் ஆரம்பித்த இவரது ‘அமிர்தம் பிரஸ்ட்மில்க் டொனேசன்’ என்ற அமைப்பில் தற்போது 1050 தாய்மார்கள் உள்ளனர். ஒவ்வொரு தாய்மாரும் தன் குழந்தையின் தேவைக்குப் போக இருக்கும் பாலை எடுத்து அதை தாய்ப்பாலை பாதுகாப்பதற்கென்றே கிடைக்கும் பீரிசர்(Freezer) பேக்குகளில் வைத்து பீரிசரில் வைத்து விடுகின்றனர்.

தாய்மார்களிடமிருந்து அவர்கள் பாதுகாத்து வைத்துள்ள தாய்ப்பாலை மாதம் ஒரு முறை ரூபா, சேகரித்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். ‌ அங்கு இருக்கும் சோதனைக் கூடத்தில் பல நிலைகளில் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டு குழந்தைகளைச் சென்றடைகின்றன.

இதில் அனைவருக்கும் எழும் முக்கியமான சந்தேகம், என் பால் என் குழந்தைக்கே பத்தவில்லை, என்னால் எப்படி தாய்ப்பால் தானம் செய்ய முடியும் என்பதே என்கிறார் ரூபா‌. கொடுக்க கொடுக்கத் தான் பால் அதிகரிக்கும், அந்த நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினாலே போதும் அவர்களாலே அதை அனுபவித்து உணர முடியும் என்கிறார்.

ஒரு தேக்கரண்டி தாய்ப்பால் உங்களால் கொடுக்க முடிந்தாலும் போதும் அது ஒரு சிறு குழந்தையின் பசியைப் போக்கும். இவ்வாறான குழந்தைகளின் தாய்ப்பால் தேவையை அனைவருக்கும் உணர்த்தி வரும் ரூபா இந்த ஊரடங்கு காலத்திலும் காவல்துறை மற்றும் நண்பர்கள் உதவியுடன் தடை இல்லாமல் இச்சேவையை சுமார் 800 லிட்டர் அளவில் தாய்பாலை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ரூபா கூறுகையில், இச்சேவை தடையில்லாமல் நடைபெற போதுமான உபகரணங்கள் வழங்கி அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடும் இந்த நேரத்தில் தாய்ப்பாலின் அவசியத்தை உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 37

0

0