டுவிட்டரில் உதயநிதி வெளியிட்ட விநாயகர் படம் : அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!!

25 August 2020, 12:11 pm
Minister Talk About DMK - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்து வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு எடுத்துரைத்தார், மேலும் அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில் டுவிட்டரில் விநாயகர் சிலை படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளது , இது அவர்களுக்கு (திமுக) ஏற்பட்டுள்ள காலத்தின் கட்டாயம், இந்துக்களை இழிவாக பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதிமுக ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி வருகிறது. சிறுபான்மை மக்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை திமுக ஏமாற்றி வருகிறது.

சிறுபான்மை மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்தது அதிமுக, இந்துக்கள் உணர்வுகளைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற வகையில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்வது அதிமுக தான், அதிமுகவின் கொள்கையும் அதுதான்,மக்கள் திருநீறு பூசுவதை கூட சாம்பலைப் பூசுகிறார்கள் என்று பலமுறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ராமர் என்ன பாலம் கட்டினார், ராமர் என்ன பொறியாளரா, கட்டிட வல்லுனரா என்றும் விமர்சனம் செய்தவர்கள் திமுக,ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கேவலமாக கவிதை எழுதினார். இதனை பலரும் எதிர்த்த பின்னர் அதில் அடக்கத்தை காட்டினார்கள், கந்த சஷ்டி கவசம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஒட்டு மொத்த இந்து மக்கள் கொதித்து எழுந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் திமுகவினர் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள் தவிர அது உண்மையான சொரூபம் அல்ல,தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் திமுகவின் உண்மையான சொரூபம் அது கிடையாது,காலம் காலமாக இந்துக்களை பழித்து வருவது வாடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,அதிமுகவில் இருப்பவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சரியான கருத்தை தான் தெரிவித்துள்ளார்.

எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் தவிர மாறுபட்ட கருத்து ஏதும் அவர் தெரிவிக்கவில்லை என்றார்.

Views: - 1

0

0