மத்திய அமைச்சரை சந்திக்க விரைவில் டெல்லி பயணம் : அமைச்சர் கடம்பூர் ராஜு

27 September 2020, 1:15 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரையரங்குகளை திறப்பது பற்றி மத்திய தகவல் துறை அமைச்சர் சந்திக்க உள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

சி.பா.ஆதித்தனார் 116ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ மலர் தூவி மரியாதை செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை, அனைத்துப் பிரச்சினைகளிலும் இருப்பது போல, இந்த விஷயத்திலும் கருத்து வேற்றுமை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

மாணவர்கள் சந்தேகம் கேட்பதற்காக மட்டுமே,‌ பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தவிர, பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறவில்லை,பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்.

மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு நினைவு மண்டபம் அமைப்பது மற்றும் பாரத ரத்னா விருது பற்றி முதல்வர் தகுந்த முடிவெடுப்பார். அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கும் அதிமுக செயற்குழுவிறக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, துறை ரீதியாக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை பார்ப்பது வழக்கமான ஒன்று தான்.

திரையரங்குகளை திறப்பது பற்றி மத்திய தகவல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளேன். அனுமதி கொடுத்ததும் துறை ரீதியாக டெல்லி செல்ல உள்ளதாகவும், இதுபோன்றுதான் அமைச்சர்கள் துறை ரீதியாக டெல்லி செல்வது வழக்கம். ஊடகங்களும் எதிர்க்கட்சிகள் தான் இதை தேவை இல்லாமல் பிரச்சனையை உண்டாக்குகின்றன என்றார்

அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் , சசிகலா வருகை குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, செயற்குழு கூட்டத்திற்கு முன்னர் அதில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து வெளியில் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.