திருச்சி பேருந்து நிலையத்தை இடித்து அகற்ற முயற்சி… கிளம்பிய கடும் எதிர்ப்பு ;பேப்பர் ஏஜென்ட் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
16 February 2023, 1:16 pm
Quick Share

திருச்சி அருகே பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றும் முடிவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பேப்பர் ஏஜென்ட் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியில் நகரப் பேருந்து நிலையம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த நகர பேருந்து நிலைய வளாகத்தில் வணிக நிறுவன கடைகளும் செயல்படுகிறது. இந்நிலையில், நகரப் பேருந்து நிலையத்தின் கடைகளை இடித்து அகற்றிவிட்டு அங்கு வார சந்தை கட்டுவதற்காக நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக கடை வைத்திருப்பவர்களுக்கு கடையை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று நகராட்சி கமிஷனர் போலீசார் உடன் வந்து கடைகளை இழுத்து பூட்டி சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்தனர்.

அப்போது, அங்கு கடை வைத்திருந்த ராஜா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி முயற்சியை தடுத்தனர். அப்பகுதி பொதுமக்கள் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ளே பேருந்துகள் வந்து செல்லும் என்பதையும், பேருந்துகள் இங்கு நிற்கும் என்பதையும் நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு நகராட்சி தரப்பில் எந்த விதமான பதிலும் இல்லை. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது. நகர பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் பிடிவாதமாக செயலில் ஈடுபடுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 384

0

0