விஸ்வரூபம் எடுத்த சாராயக் கடை சந்து விவகாரம்… மூடி மறைத்த லால்குடி நகராட்சி நிர்வாகம்!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 6:09 pm

திருச்சி அருகே சாராயக் கடை சந்து என வீதிக்கு வித்தியாசமாக வைக்கப்பட்ட பெயர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லால்குடி நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்துள்ளது.

லால்குடியில் உள்ள சிவன் கோயில் அருகே நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டில் உள்ள ஒரு வீதிக்கு பெயர் சாராயக்கடை சந்து. இந்த வீதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் சாராயம் விற்று வந்ததால் இந்த வீதிக்கு சாராயக்கடை சந்து என பெயர் வைத்துள்ளனர்.

அதற்குப் பின்னர் இந்தப் பெயரால் அந்த பகுதி மக்களுக்கு தர்ம சங்கடமாக உள்ளது என சிலரின் முயற்சியால் இந்த வீதிக்கு ராமசாமி பிள்ளை வீதி என பெயர் மாறியது. அது ஒரு சமூகத்தின் பெயராக இருந்ததால் பின்னாளில் அது பழைய பெயரான சாராயக்கடை சந்து என மீண்டும் பெயர் மாறியுள்ளது.

அரசு பதிவேட்டிலும் சாராயக்கடை சந்து என பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீதியின் பெயரை சிலர் புகைப்படம் மற்றும் காட்சி வாயிலாக சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட நிலையில், அது தற்போது வைரலாகி இது ஒரு பேசு பொருளாகி வருகிறது. இதனையறிந்த நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அந்த வீதியின் பெயர் பலகையை மறைத்து வைத்துள்ளனர்.

வரும் நாட்களில் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வீதிக்கு பெயர் மாற்றம் செய்யப் போவதாக தகவல்கள் கூறப்படுகிறது. எது எப்படியோ அரசு பதிவேட்டில் உள்ள ஆரம்பகால பெயரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டதால் தற்போது சாரயக்கடை சந்து பெயர் மாற்றம் செய்யும் அளவிற்கு மாறியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?