தடையை மீறி வெற்றி கொண்டாட்டம்.. போலீசில் புகார் கொடுத்தவருக்கு அடிஉதை.. திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு..!!

5 May 2021, 7:18 pm
trichy dmk attack - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை கொண்டாடியதை, போலீசாரிடம் கூறிய அதிமுக பிரமுகரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரையடுத்த பெரிய ஆலம்பட்டி புதூரைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் திமுக நிர்வாகியான சார்லஸ் என்பவர், திமுக வெற்றியை தனது பகுதி நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சார்லஸை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர், நேராக பச்சமுத்துவின் வீட்டிற்கு சென்று நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில், பச்சமுத்துவை சார்லஸ் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அவர் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பச்சமுத்து தரப்பினர் அளித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 235

0

0