ரூ.1500 கேட்ட 102! பிரசவம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண்ணுடன் வாக்குவாதம்.!!

13 August 2020, 2:41 pm
Free Delivery care Issue - Updatenews360
Quick Share

திருச்சி : மகப்பேறு முடிந்து வீடு திரும்பிய பெண்ணிடம் பணம் கேட்டதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக்(வயது 36). இவருக்கு பூங்கொடி(வயது 34) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருவுற்ற பூங்கொடி கடந்த 30-ஆம் தேதி மகப்பேறுக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம் அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூங்கொடிக்கு இரவு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 12 நாள் சிகிச்சைக்கு பின் திங்கட்கிழமை மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்த பூங்கொடி, தனது வீட்டுக்கு செல்ல அங்குள்ள 102 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கூறினார். ஆனால் பூங்கொடியிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அவரிடம் ரூ.1500 கேட்டு பேரம் பேசியுள்ளார்.

இதையறிந்த பூங்கொடியின் சகோதரர் 104 மருத்துவ உதவி மையத்திற்கு தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். புகாருக்கு பின் அங்கு வந்த 102 ஆம்புலன்ஸ் பூக்கொடி மற்றும் உடன் இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஆனாம்பட்டி சென்றுள்ளது. அங்கு 102 ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட கிராம மக்கள் சராமாரியாக ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியினை சேர்ந்த நமசிவாயம் மனைவி ரேணுகா(வயது 25) என்ற பெண்ணை திருச்சி மருத்துவமனையிலிருந்து ஆனாம்பட்டிக்கு சென்று இறக்கி விட 102 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ரூ.600 கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரசவத்திற்கு ஆட்டோ ஓட்டுநர்களே இலவசம் என்று அறிவித்திருக்கும் நிலையில், பிரசவப் பெண்களை பிரத்யேமாக அழைத்து செல்லும் 102 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆயிரத்து 500 ரூபாய் கேட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0