உயிரோடு விளையாடுகிறதா உணவகங்கள்…? 140 கிலோ கெட்டுப்போன அசைவ உணவுகள் பறிமுதல் ; பிரபல ஜூஸ் கடைக்கு சீல்!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 2:10 pm
Quick Share

திருச்சியில் உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 140 கிலோ கெட்டுப்போன அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ், செல்வராஜ், வசந்தன், இப்ராஹிம், ரெங்கநாதன், ஜஸ்டின், வடிவேல் மற்றும் அன்புச்செல்வன் கொண்ட குழுவால் சாஸ்திரி ரோடு, சாலை ரோடு மற்றும் தில்லைநகர் பகுதியை சுற்றியுள்ள ஷவர்மா கோழிக்கறி விற்பனை செய்யும் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் சுமார் 21 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு செய்ததில் கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மற்றும் கெட்டுப்போன பழங்கள் சுமார் 140 கிலோ வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், ஒன்பது கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில், 6 கடைகளுக்கு தலா ரூ. 3000 வீதம் 18000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது. மேலும், ஆய்வின் போது ஜூஸ் கடை ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது ஜூஸ் போட வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல் செய்து அந்த கடை சீல் செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஷவர்மா கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அசைவ உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றையதினம் மீதமாகும் கோழி இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது.

ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் கோழி இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

மேலும், பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதி அருகில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்
9944 95 95 95, 9585 95 95 95 மாநில புகார் எண் 9444042322 எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Views: - 332

0

0