கேரளா நிலச்சரிவு : உயிரிழந்த குடும்பங்களுக்கு திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் ஆறுதல்.!
11 August 2020, 10:14 amதூத்துக்குடி : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் குடும்பங்களுக்கு திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதா ஜீவன் ஆறுதல் கூறினார்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 49பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் , ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 5 பேர் என தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதா ஜீவன் கயத்தார் பாரதி நகரில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்கள் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேரளா நிலச்சரிவில் உயிரிழந்த உடல்களை பார்க்க சென்றவர்கள் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதால் உடலை பார்க்க முடியமால் திரும்பியுள்ளனர்.கேரளா அரசு அறிவித்துள்ளது நிவாரணத்தை உயர்த்தி உயிர் இழந்த ஒவ்வொருவருக்கும் ரூ 25லட்சம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க கேரளா, தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை திமுக தலைவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். நிலச்சரிவுக்கு பின்னர் பலர் அங்கிருந்து தமிழகத்திற்கு குடிபெயர விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு நிரந்தரமாக அவர்கள் குடியேற பாதுகாப்பான குடியிருப்பு உருவாக்க வேண்டும் என்றார்.