“ஒரே மாதத்தில் இரண்டு முறை“ : மீண்டும் 100 அடியை எட்டிய பவானி!

21 September 2020, 11:38 am
100 Feet Reach - updatenews360
Quick Share

ஈரோடு : நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஒரே மாதத்தில் இரண்டு முறை 100 அடியை எட்டியது பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவின் பெயரில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி நீர் 120 நாட்களுக்கு திறக்கப்பட்டது.

இதன்பின்னர் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மீண்டும் 100 அடியை எட்டியது.

அதன் பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து நேற்றைய நிலவரப்படி 99.94 அடியாக குறைந்தது. தற்போது மீண்டும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 11661 கன அடியாக அதிகரித்து இன்று மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. இந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பவானிசாகர் அணை இரண்டு முறை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.70 அடியாகவும் நீர் இருப்பு 29.2 டி.எம்.சி ஆகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 11661 கன அடியாகவும் அணையிலிருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு 750 கன அடி நீரும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீரும் என மொத்தம் 3050 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது வருகிறது.