ஓடிபி கேட்ட விவகாரத்தில் டுவிஸ்ட்… திமுக மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 1:39 pm
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தி.மு.க. கட்சி ‘ஓரணியில் தமிழகம்’ என்ற பெயரில் நடத்தி வந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தில், பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி. (ஒருமுறை கடவுச்சொல்) பெறப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க. நிர்வாகி ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், உறுப்பினர் சேர்க்கையின்போது ஓ.டி.பி. பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 04) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

“உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை” என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால், தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கையில் ஓ.டி.பி. பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
