மொபட் வண்டியால் பெரும் விபத்து : விபத்தான வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பலி!!

6 July 2021, 11:51 am
TVS Xl Accident- Updatenews360
Quick Share

திருப்பூர் : விபத்தில் சிக்கிய மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி குழந்தை நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிகண்ணன். லாரி டிரைவரான இவர் வேலைக்காக சேலத்தில் இருந்து கோவைக்கு மொபட்டில் சென்றார். திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர், கருக்கன்காட்டுபுதூர் பிரிவு சாலை அருகே செல்லும் போது திடீரென மொபட் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கோபிகண்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே விபத்தில் சிக்கிய மொபட் தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே விழுந்து கிடந்தது.

இந்தநிலையில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கல்லூரி மாணவர்களான பெருமாநல்லூர் அருகே காளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 22), சந்தோஷ் (வயது 20) ஆகியோர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
கருக்கன்காட்டுபுதூர் பிரிவு சாலை அருகே வரும் போது நடுரோட்டில் மொபட் கிடப்பதை அறியாமல் அதன் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 306

0

0