ஒரே நாளில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி : கண்மாயில் குளிக்க சென்ற போது விபரீதம்!!

7 November 2020, 6:52 pm
Dead- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே வெவ்வேறு இடங்களில் கண்மாய் நீரில் மூழ்கிய இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளப்பன் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது22). நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அங்குள்ள கண்மாயில் சதிஷ் குமார், அவரது அண்ணன் முனியசாமி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது சதீஷ்குமார் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று சிவகாசியை சேர்ந்த பெத்துராஜ் என்பது மகன் விக்னேஷ் (வயது 20). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியில் உள்ள பேச்சியம்மாள் (வயது 70) என்ற தனது பாட்டி உடல்நலக் குறைவினால் உயிர் இழந்ததால் அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஊருக்கு வந்துள்ளார்.

இறுதி சடங்கு முடிந்த பின்பு அங்கு உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரங்குடி போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் பகுதியில் ஒரே நாளில் இரு இளைஞர்கள் கண்மாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Views: - 20

0

0