வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்..!!!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2024, 1:59 pm
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்..!!!
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் இன்றும் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.
0
0