12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது வைகை அணை: விநாடிக்கு 2,139 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

18 January 2021, 5:08 pm
vaigai dam fill - updatenews360
Quick Share

ஆண்டிப்பட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 71 அடியை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழையால் வைகை அணை நிரம்பியுள்ளது. பொதுவாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 69 அடி வரையில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகு உபரிநீர் வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நேற்று நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 593 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதாலும், தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணை இன்று தனது முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது.

வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரையில் தண்ணீர் தேக்கப்படுவதால் அணை தற்போது கடல் போல காட்சியளிக்கிறது. வைகை அணை கட்டப்பட்டு இதுவரையில் 5 முறை மட்டுமே 71 அடிவரையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 1981, 1984, 1987, 1998, 2008 ஆகிய ஆண்டுகளில் வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. வைகை அணை, தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதல் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0